தனி ஒருவரின் ரசிகர் மன்றத் தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டு வருவதாகவும், அரசுப்பள்ளிகளை அழிக்கும் முயற்சியில் அரசே ஈடுபடுவதாகவும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலையில்லாக் கல்வி உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


''அதிமுக அரசால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை உட்பட 14 வகையான கல்வி உபகரணங்கள், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களிலேயே எப்போதும்  வழங்கப்பட்டுவிடும். 


இந்த விடியா அரசு பொறுப்பேற்றவுடன், நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, சைக்கிள் போன்றவை ஓரளவு வழங்கப்பட்டுள்ளன. சீருடையைப் பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போதுதான் நூலே வழங்கப்பட்டுள்ளது. எப்போது இந்த நூல் துணியாகி, துணி ஆயத்த சீருடையாகி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 


"பருத்தி துணியாக கொடியில் காய்த்தது" என்று கிராமத்தில் கூறுவார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கைத்தறி துணி நூல் துறையின் செயல்பாடு உள்ளது. மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இதுவரை செயல்படுத்த முனைப்பு காட்டவில்லை இந்த விடியா அரசு. இது தவிர பேனா, பென்சில், க்ரேயான்ஸ், ஸ்கெட்ச் பென்சில், ரப்பர், பரிட்சை அட்டை, காலணி போன்ற பிற உபகரணங்களும் இதுவரை முழுமையாக வழங்கப்படாமல் உள்ளன. 




பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தன்னுடைய துறையில் முழுமையான கவனம் செலுத்தாமல் தனி ஒருவரின் ரசிகர் மன்றத் தலைவராக உலா வருவது வெட்கி தலைக்குனிய வைக்கக் கூடியதாகும். சித்தம் போக்கு, சிவன் போக்கு என்ற நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பது மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கள் வாரிசுகளின் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். 


தமிழகத்தில் ஆளும் கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளை வளர்ப்பதற்காகவே அரசுப் பள்ளிகளை அழிக்கும் முயற்சியில் இந்த விடியா திமுக அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது. தமிழக மாணவச் செல்வங்களின் வாழ்வை சூனியமாக்கும் முயற்சியில் ஈடுபடும் இந்த விடியா அரசை வன்மையாக  கண்டிக்கிறேன். 


மாணவச் செல்வங்களுக்கு வழங்கவேண்டிய விலையில்லா அனைத்து கல்வி உபகரணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்''.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண