தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (19.4.2022) மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் அவர்கள் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்