அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. 


மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், பாஜக உடனான கூட்டணி, தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக - பாஜக கூட்டணி:


மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்பான ஆலோசனை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் போன்ற தலைவர்களை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது, அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என கடந்த 18ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால், இருகட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு விமர்சித்துக் கொண்டனர். அதேநேரம், அண்ணாமலை பேசுவது சரியில்லை அவருடன் தான் மோதலே தவிர, பாஜக உடன் கிடையாது என சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.


இதையும் படிங்க: Today Rasipalan September 25: தனுசுக்கு நட்பு.. கும்பத்துக்கு கவலை..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!


”அண்ணாமலை வேண்டாம்”


இதனிடயே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களை கொதிப்படையச் செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக வேறு தலைவரை நியமிக்காவிட்டால் இரு கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் பணியாற்றுவது சாத்தியமற்றது எனவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என, ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். இதனால், இன்றைய கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.


தேர்தல் பணிகள்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தேர்தல் வியூகங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகக் கூடும்.