அதிமுகவில் மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 


அ.தி.மு.க.வில் அதிகார மோதல்:


இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டினர். அப்போது, அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 


அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடவும் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தனர். இந்த திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.


இதையடுத்து, நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் நடந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.


எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்த தீர்ப்புகள்:


இதற்கு மத்தியில், கடந்தாண்டு ஜூலை, 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளை அங்கீகரிக்கக் கோரி பழனிசாமி சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திருத்த விதிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என பழனிசாமி தரப்பினர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும், அதிமுக.,வில் திருத்தப்பட்ட விதிகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு:


தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீங்கி, பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து இன்று(மே 16) இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.


இதை தொடர்ந்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. சொல்லபோனால், அவருக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.