பண்டிகை காலங்களில்‌ தனியார்‌ பேருந்துகளில்‌ வசூலிக்கப்படும்‌ அளவுக்கு அதிகமான கட்டணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்துத் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:


''பொங்கல்‌ பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ்‌ போன்ற பண்டிகைகள்‌ மற்றும்‌ சுதந்திர தினம்‌, குடியரசு தினம்‌ போன்ற தேசியப்‌ பண்டிகைகள்‌ வரும்போது அதனையொட்டி சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள்‌ வந்தாலோ அல்லது ஓரிரு நாட்கள்‌ விடுப்பு எடுத்தோ தங்கள்‌ சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை அரசு ஊழியர்கள்‌, தனியார்‌ நிறுவன ஊழியர்கள்‌, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ உள்ளிட்ட அனைவரும்‌ வாடிக்கையாக கொண்டுள்ளனர்‌.


இதுபோன்ற நாட்களில்‌ ரயில்‌ மற்றும்‌ அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ பயணம்‌ செய்ய டிக்கெட்‌ கிடைக்காதவர்கள்‌ தனியார்‌ பேருந்துகளை நாடுவதும்‌, தனியார்‌ பேருந்து நிறுவனங்கள்‌ இதைச்‌ சாதகமாகப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு அதிக கட்டணம்‌ வசூலிப்பதும்‌ வாடிக்கையாக இருந்து வருகின்றது.


தி.மு.க. தலைவர் ஸ்டாலின்‌ எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது, பண்டிகை காலங்களில்‌ அதிக கட்டணம்‌ வசூலிக்கும்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்‌ சாட்டியதோடு, இது ஒரு பகல்‌ கொள்ளை என்றும்‌ விமர்சித்து இருந்தார்‌. ஆனால்‌, இன்று அவர்‌ முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னால், பண்டிகை காலங்களில்‌ தனியார்‌ பேருந்து நிறுவனங்களால்‌ வசூலிக்கப்படும்‌ கட்டணம்‌ அளவுக்கு அதிகமாக உள்ளது. இதைத்‌ தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று நான்‌ உள்பட பல்வேறு அரசியல்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ வேண்டுகோள்‌ விடுத்தும்‌, நடவடிக்கை ஏதுமில்லை. 


மாறி மாறிப் பேசுவதுதான்‌ திராவிட மாடலா?


மாறாக, 'தனியார்‌ பேருந்துகளின்‌ கட்டணத்தை அரசு நிர்ணயம்‌ செய்ய முடியாது' என்று போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ தனியார்‌ பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்‌. அமைச்சரின்‌ இந்தப்‌ பேச்சு, தனியார்‌ பேருந்து கட்டண வசூலை மேலும்‌ அதிகரித்துள்ளது. ஆட்சியில்‌ இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில்‌ இருக்கின்றபோது ஒரு பேச்சு. ஒருவேளை இதுபோன்று மாறி, மாறி பேசுவதுதான்‌ “திராவிட மாடல்‌” போலும்‌!


இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்‌ பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,500 ரூபாய்‌, திருநெல்வேலி செல்வதற்கு 3,300 ரூபாய்‌, கொச்சின்‌ செல்வதற்கு 3,000 ரூபாய்‌ என தங்களுக்கு ஏற்றால்போல்‌, தங்களின்‌ விருப்பப்படி தனியார்‌ நிறுவனங்கள்‌ ஏழை, எளிய மக்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்தன. இந்தக்‌ கட்டணம்‌ சாதாரண நாட்களில்‌ வசூலிக்கப்படும்‌ கட்டணத்தைவிட மூன்று மடங்கு அதிகம்‌. இதுகுறித்து
விமர்சனங்கள்‌ எழுந்தவுடன்‌ அரசு சார்பில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும்‌, 49 தனியார்‌ பேருந்து உரிமையாளர்களிடமிருந்து 92,500 ரூபாய்‌ அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன. அதாவது சராசரியாக ஒரு பேருந்திற்கு 1,877 ரூபாய்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டு இருக்கிறது.




வெறும்‌ கண்துடைப்பு 


இதிலிருந்தே, இந்த ஆய்வு வெறும்‌ கண்துடைப்பு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள்‌ எளிதில்‌ புரிந்து கொள்வார்கள்‌. இதுபோன்ற “ஆய்வு” மற்றும்‌ ’அபராதம்‌' கட்டணத்தை மேலும்‌ அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, முறைப்படுத்த வழி வகுக்காது. இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தும்‌ தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


கிறிஸ்துமஸ்‌ பண்டிகையினைத்‌ தொடர்ந்து, புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகை வர இருக்கின்றது. இவற்றை எல்லாம்‌ சிறப்பாகக்‌ கொண்டாட ஏழை, எளிய மக்கள்‌ கிராமப்புறங்களை நோக்கிச்‌ செல்வது வழக்கம்‌. அரசு தரப்பில்‌ தற்போதைய மவுன நிலை நீடித்தால்‌, கட்டணம்‌ மேலும்‌ அதிகரிக்கக்கூடும்‌. “செயலற்ற” நிலையிலிருந்து “செயல்‌” நிலைக்கு அரசு மாற வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது. இதனை செயல்படுத்த வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ அரசுக்கு உள்ளது.


எனவே, முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாக கவனம்‌ செலுத்தி, பண்டிகைக்‌ காலங்களில்‌ தனியார்‌ பேருந்து நிறுவனங்களால்‌ வசூலிக்கப்படும்‌ அபரிமிதமான - கட்டணத்தை முறைப்படுத்தவும்‌, தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைத்‌ தடுக்கவும்‌, அதிக அளவிலான அரசுப்‌ பேருந்துகளை இயக்கவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌.


இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.