புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவிய தீண்டாமை கொடுமையை களைய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் எஸ்.பி. வந்திதா பாண்டேவிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிக்கை மூலம் பாராட்டு தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் களைய துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டுகிறது. 


1. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் ஆதிதிராவிடர்கள் கோயிலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கோயில் நுழைவுக்கு ஆவன செய்ததோரு அதே கிராமத்தில் உள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவனை முறை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேநீர்க்கடையில் ஆய்வு மேற்கொண்டு அக்கடையின் உரிமையாளர் மீது வண்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரித நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பளரின் செயல்பாடுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டுகிறது. மேலும் அதே மாவட்டத்தில் உள்ள வேங்கை பைல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனித மலக்கழிவுகள் மிதந்தாக புகார் அளிக்கப்பட்டதும் தற்காலிக நீர்த் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, அதில் விடப்படும் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்த பின் வழக்கமாக செய்யப்படுவது போல் தண்ணீர் விநியோகிக்கவும் எடுக்கப்பட்ட முடிவும் பாராட்டத்தக்கது.


2.இருப்பினும் மேற்சொன்ன மூன்று சம்பவங்களைப் பொறுத்தும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமே முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.


3. எனவே மேற்படி சம்பவங்கள் பற்றியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் இதுபோல் மீண்டும் நடக்கா வண்ணம் எடுக்க உத்தேசித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.


என்ன நடந்தது? 


அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.


குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:


இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.


திட்டமிட்டு சதிச்செயல்?


அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:


இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊர்மக்களிடம் விசாரித்தபோது சாதிய பாகுபாடு எதுவும் நாங்கள் காட்டுவதில்லை எனவும், பட்டியிலன மக்கள் தான் கோயிலுக்குள் வருவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அதிரடி:


இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுதொடர்பாக பேசிய பட்டியலின பெண், கடந்த 3 தலைமுறைகளாக வேங்கை வயல் கிராமத்தில் நாங்கள் வசித்து வருவதாகவும், ஆனால் இப்போது தான் முதல்முறையாக இந்த கோயிலுக்குள் வந்து இருப்பதாகவும் கூறினார். எந்த விதத்தில் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் கருதுகின்றனர் என புரியவில்லை. நாங்களும் படித்து சமூகத்தில் முன்னேற தொடங்கிவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.


இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவை தொடர்பாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.