எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்:
இந்நிலையில் தடையை மீறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி கே.பி முனுசாமி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அதே இருக்கையில் உட்கார அனுமதியளித்தார்.
அதிமுகவினர் கைது:
இதனை கண்டித்தும், பேரவையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டதாக கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை அறிந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் மாலைப் பொழுதில் விடுதலை செய்யப்பட்டனர். அதையடுத்து திரவ பானத்தை அருந்தி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை ஒடுக்க நினைத்தால் எந்த காலத்திலும் நடக்காது என்றும் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இயக்கம், அதனை கட்டி காத்தவர் ஜெயலலிதா என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுகவின் ஜனநாயக உரிமையை பறிக்க திமுக நினைக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.