கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் என அதிமுக மூன்று அணிகளாகப் பிரிந்தது. உட்கட்சிப் பூசலைத் தொடர்ந்து மூன்று அணிகளும் அக்கட்சிக்கு உரிமை கொண்டாடியதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் சில மாதங்கள் முடக்கப்பட்டது. பின்னர், ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவதன் மூலம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் மீண்டும் இரட்டை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது.


ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் மீண்டும் ஒற்றைத் தலைமைப் பிரச்சினையில் மோதலில் ஈடுபட்டு உச்ச நீதிமன்றத்தை தற்போது நாடியுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. 


இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உள்ளது.


தற்போது, ​​ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் இரு அணிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.


கடந்த ஜனவரி 30ம் தேதி ‘இரட்டை இலை சின்னம் தொடர்பான பதிலை பிப்ரவரி 3ம் தேதிக்குள் (இன்று) சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவினை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணியினர் உரிமை கோருகின்றனர். 


பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு:


 உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது. 


அந்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குரியதாக உள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. 


இரட்டை இலை யாருக்கு:


இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். தேர்தல் சின்னம் தொடர்பாக யாரும் எந்த பிரச்சனையையும் கொண்டு வரவில்லை. ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி தெரிவிக்க வேண்டும். 


தற்போது வரை அதிமுக இரட்டை தலைமைதான்:


ஜுலை 11 ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்காததால் தற்போது வரை அதிமுகவில் இரட்டை தலைமை நீடிக்கிறது. 


இரட்டை இலை சின்னம் முடங்குமா? 


இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் அதிமுக தலைமை பதவியில் இருப்பவர்களே கையெழுத்திட முடியும். சின்னத்துக்கான படிவத்தில் கையெழுத்திட தயார் என ஓபிஎஸ் கூறினாலும், அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக இல்லை. இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னம் ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்பார்கள். இரு தரப்பும் கோரிக்கை விடுத்தால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் முடங்கவே அதிக வாய்ப்புள்ளது.