உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலம் - சென்னை விமான சேவை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையொட்டி 31 மாதங்களுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை இன்று துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் சேலம் வந்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பின்னர் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர். தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் மாவட்டமாக உள்ளது. தென்னிந்தியா என்று சொல்லக்கூடிய ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களையும் இணைக்கும் சேலம் மாவட்டமாக உள்ளது. தொழிலாளர்கள் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் சேலத்தில் இருந்து சிங்கப்பூர் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கும் இனைக்கும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தர உள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய பாம்பே டெல்லி உள்ளிட்ட விமான சேவைகளை இணைக்கும் விமான நிலையமாக சேலம் விமான நிலையம் உள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் முதல் சீரடி மற்றும் திருப்பதி செல்வதற்கான விமான சேவை ஒரு மாதத்திற்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அவரும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருப்பதாக" கூறினார்.



மேலும், "சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் பல்வேறு நிறுவனங்கள், மருத்துவமனை, ரயில்வே கோட்டம், பல்கலைக்கழகம் என அனைத்தையும் கொண்டு வந்து பின்தங்கிய சேலம் மாவட்டத்தை மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு கொண்டு வந்தவர் கலைஞர் என யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். இதனை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.


இந்த நிலையில், சென்னையில் இருந்து சேலம் வந்த கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிவாகனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் ஆளுநர் வாகனத்தில் தேசிய கொடி கட்டப்படவில்லை. இதற்கு ஆளுநரின் பாதுகாப்பு அலுவலர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட காரிலும் தேசிய கொடி இல்லை. இதற்கு பின்னர் 10 நிமிடம் தாமதத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த காரிலேயே கவர்னர் புறப்பட்டு சென்றார்.