தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக எண்ணிக்கையில் இருக்கும் அதிமுக-வில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை என்ற சொல், தற்போது அக்கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, வீதிக்கு வந்துவிட்டது விவாதம். கிட்டத்தட்ட, அக் கட்சியே உடைந்துவிடுமோ என்ற உணர்வு ஏற்படுவதைக் கூட தவிர்க்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஜெ-வுக்கு முன், ஜெ-வுக்குப் பின்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, சசிகலாவின் சிறைக்குப் பின் ஓ. பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம். அதன்பின், ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து இரட்டைத்தலைமை, சசிகலாவுக்கு கல்தா, மீண்டும் தற்போது ஒற்றையா, இரட்டையா என குழப்பம் என பலப்பல பரிமாணங்களில் பயணித்து வருகிறது அஇஅதிமுக. எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதா காலத்தில், இந்தியாவின் பெரிய கட்சிகளில் ஒன்றாக பரிணமித்தது. தமிழகத்தின் அசைக்கமுடியாத இரு கட்சிகளில் ஒன்றாக பயணித்து வந்த அதிமுக, இரட்டைத் தலைமை வந்த பிறகு, ஆட்சியை மீண்டும் தக்க வைக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, தொண்டர்களிடமே பெரும் சுணக்கம் வந்துவிட்டது.
தொண்டர்கள் குழப்பமும் தலைவர்கள் முடிவும்
யாருடைய வழிகாட்டலில் பயணிப்பது என்ற கேள்வியும் அதிமுக தொண்டர்களிடையே இருந்தது என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில்தான், கட்சி பிளவுப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்து, இரட்டைத் தலைமைக்கான வழிகளை, கட்சி சட்ட விதிகளில் ஏற்படுத்தினர்.
சுனாமியாக மாறிய ஒற்றைத்தலைமை கோஷம்
எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது, ஒபிஎஸ்-தான் தலைவர், ஈபிஎஸ்-தான் தலைவர் என்ற கோஷங்கள் எழும். வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். ஆனால், கடந்த ஒரு வாரமாக, ஒற்றைத் தலைமை என்ற கோஷம், ஈபிஎஸ் தரப்பில் இருந்து தீவிரமாக வைக்கப்பட்டது. அதில், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் மிகத் தெளிவாக இருந்தனர். வழக்கமான கோஷமாக சென்றுவிடும் என்று எதிர்பார்த்த ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி ஆதரவாளர்களின் தீவிரத்தால் சற்று ஆடிப் போய்விட்டனர் என்பது கள நிலவரம்.
ஓபிஎஸ் அடித்த திடீர் சிக்சர்
இதை அடுத்துதான், பத்திரிகையாளர்களை எப்போதாவது சந்திக்கும் ஓபிஎஸ், நேற்று, அதிரடியாகச் சந்தித்து, பிரதமர் சொன்னதால்தான், துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்பது முதல் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வரவேண்டும் என சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்தது வரை அனைத்துமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதை எடப்பாடி அணி எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
கட்சி நடுநிலையாளர்களின் நிலை
இன்றைய சூழலில், ஒபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரு அணிகளாக, பொதுக்குழுவைச் சந்திக்க அதிமுக தயாராகிவிட்டது என்றே தெரிகிறது. இருவரையும் சமாதானம் செய்து, ஒரே அணியாக பயணிக்க முயற்சி செய்யும் தலைவர்களும் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சுருங்கிவிட்டனர். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. முடிவு வரும் போது, பார்த்துக் கொள்வோம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டனர்.
பொறுத்தது போதும், பொங்கியெழு நிலையில் OPS
ஒ. பன்னீர்செல்வம் அணியை பொறுத்தவரை, முதல்வர் பதவி முதற்கொண்டு பல விடயங்களில் விட்டுக் கொடுத்தாகிவிட்டது. பொறுத்ததுபோதும் பாலகுமாரா, பொங்கியெழு என்ற நிலைக்கு நேற்றே வந்துவிட்டார். எனவே, இரட்டை தலைமையிலேயே தொடரலாம், இல்லையென்றால் தாமே கட்சியின் பொதுச் செயலாளர் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார் OPS. தம்முடன் முக்கிய நிர்வாகிகள் நிறையே பேர் இருக்கிறார்களா என்பதில் ஓபிஎஸ்-ஸுக்கு சந்தேகம் இருந்தாலும், தம்முடன் தொண்டர்கள் இருக்கிறார்கள், பொதுக்குழுவில் தமக்கு ஆதரவு இருக்கும் என உறுதியாக நம்புகிறார்.
இனி எல்லாம் நம்மயமே – EPS
இனி, வழவழ, கொழகொழ வேண்டாம், நாமதான் எல்லாமே என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கிவிட்டது ஈபிஎஸ் தரப்பு. எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தமக்கு நிறைய இருப்பதை உறுதிச் செய்துகொண்ட பிறகே, முழுத் தெம்புடன் ஒற்றைத் தலைமைதான், அதுவும் தாம்தான் என களமிறங்கி உள்ளார் ஈபிஎஸ்,
சுவரொட்டிகளுடன் தொண்டர்கள்
தொண்டர்களைப் பொறுத்தமட்டில், எந்தெந்த ஊரில் எவருக்குச் செல்வாக்கு இருக்கிறதோ, அந்தந்த ஊர்களில் சுவரொட்டிகளின் மூலம் தங்கள் ஆசைகளை சொல்லி வருகின்றனர். தொண்டர்களைப் பொறுத்தமட்டில், பொதுக்குழுவில் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று நம்புகின்றனர்.
“வெயிட் அன்ட் வாட்ச் மோடில்” சசிகலா
சசிகலாவை பொறுத்தமட்டில், இரட்டைத்தலைமை குழப்பத்தில் கட்சி உடைந்தாலும், தம்மிடமே தொண்டர்கள் வருவார்கள் என காத்திருக்கிறார். ஏற்கெனவே பல நிர்வாகிகள் சசிகலாவிடம் பேசி வருகிறார்கள் என அவரே சொல்லி வரும் நிலையில், தற்போது மறைமுகமாக, ஒபிஎஸ்-ஸும் தம்மை வரவேற்று இருப்பதையும் கவனித்துள்ளார் என்றே தெரிகிறது. எனவே, பொதுக்குழுவில் தமது ஆதரவாளர்கள் மூலம், சசிகலா என்ன செய்யப் போகிறார் என தொண்டர்களும் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். ஆனால், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுடன் பேசியபோது, இந்தக் குழப்பத்தில் OPS தரப்பு, தம்மிடம் வந்துச் சேரும் என உறுதியாக நம்புகிறாராம்.
பொதுக்குழுவுக்கு “ஸ்டே”வா?
இரு தலைமைகளுடன் தத்தமது பலத்துடன் மோதிக் கொள்ள முயற்சிப்பதால், கட்சி உடைந்துவிடுமோ என்ற அச்சமும் சில முக்கிய, முன்னணி நிர்வாகிகளுக்கு இருக்கிறது. எனவே, அவர்கள் மட்டுமல்ல, சில முக்கிய தலைவர்களும், மறைமுகமாக தமது ஆதரவாளர்களின் மூலம், நீதிமன்றத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவதற்கு தடை வாங்க, திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
புதிய அத்தியாயமா, தொடர்கதையா
எது எப்படியோ, பொதுக்குழு நடந்தால், அது, அதிமுக-வில் தற்போது என்ன நடக்கப்போகிறது என்பதற்கான கிளைமேக்ஸ்-ஆக இருக்கப்போவது உண்மை. புதிய அத்தியாயமா அல்லது தொடர்கதையா என்பது தெரிந்துவிடும்.