தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் பல்வேறு திட்டங்களை  தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க இயக்கம்  (TamilNadu Startup and Innovation Mission) மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பெங்களூரு, டெல்லி, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் பெருகி வரும் நிலையில், ஸ்டார் அப் நிறுவனங்களை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உருவாகும் சூழல்களையும், ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்களையும் இந்த அமைப்பு வழங்கி வருகிறது.


விளிம்பு நிலை மக்களை நோக்கிய தொழில்முனைவு திட்டங்கள்


விளிம்பு நிலை சமூகங்களில் இருந்து தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஸ்டார் அப் தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி அளிக்கும் திட்டம் பல்வேறு தரப்பினரின் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது பெண்களின் மறுமலர்ச்சிக்காக தொழிலணங்கு என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனம். 


தொழிலணங்கு 


இது தொடர்பாக தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,  Startup TN, பெண்கள் தொழில் முனைவுக்கான தொடர் செயல் திட்டங்களை தொடங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த திட்டங்கள் "தொழிலணங்கு" என்ற அழகிய தமிழ் பெயரில் செயல் படுத்தப்படும் என் தெரிவித்துள்ளார்.





அதில் முதல் நிகழ்வாக மதுரை மத்திய தொகுதியில் மாண்புமிகு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிந்தனையில் உருவான புதுயுக தொழில்கள் முனையும் முதன்மையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள Smart SHG குழுக்களுக்கான ஒரு மாபெரும் நிகழ்வு 18ஆம் தேதி எல்லிஸ் நகரில் அமைந்துள்ள MRC மண்டபத்தில் நடை பெறுக்கிறது. இந்த நிகழ்வை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். சுய உதவிக் குழுக்களின் செயல் முறையை முற்றிலுமாக மாற்றி அதன் உறுப்பினர்களை ஆக்கபூர்வமான தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம். இதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து Smart SHG குழுக்களில் இருந்து உருவாகும் தொழில் முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்யவிருக்கின்றன. ‘’நம் தமிழணங்குகள் யாவரும் தொழிலணங்குகளாக மிளிர துணை நிற்போம்’’. அவர்தம் திறன் வியந்து வாழ்த்துவோம்! என தெரிவித்துள்ளார். 



கவனம் பெற்ற S2G திட்டம் 


ஸ்டார் அப் நிறுவனங்களில் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்து ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து 50 லட்சம் வரை அவர்களின் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கருத்துப்பதிவிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘’கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவித்த பிறகும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்தேன்.





அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை கொள்முதல் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் மேற்கொள்ள 25 நிறுவனங்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை சிறப்பான துவக்கமாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இதன் மூலம் புதிதாக தொழில் தொடங்கி யுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் , தமிழ் இளைஞர்களுக்கும் நன்மை ஏற்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.