கிருஷ்ணகிரியில் அதிமுக எம்பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று தமிழகத்தில் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்காக கிருஷ்ணரி மாவட்டத்தில் பயிற்சி மையங்கள் அமைத்து நம்முடைய பகுதி மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்திட இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில், இங்கு இன்று காலை அடிக்கல் நாட்டினோம்.” என்றார். 


அப்போது செய்தியாளர்கள் நேற்று வேலூரில் அமித்ஷா, தமிழர்களை பிரதமராக்குவோம் என்று சொன்னாரே? அதற்கு உங்களின் கருத்துகள் என்ன என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “ இது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒரு பெருமை ஆகும். சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தமிழர்கள் போராடியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். ராஜாஜி போன்றவர்கள் எல்லாம் பெரிய அறிஞர்கள். அவரே ஒரு காலத்தில் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த காலத்தில் ராஜாஜிக்கு கிடைக்காமல் நேருவுக்கு கிடைத்தது. 


அதேபோல், காமராஜர் அவர்களுக்கு பாரத பிரதமர் ஆவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார். மூப்பனாருக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு காரணம் திராவிட கழகம்தான் என்று அமித்ஷா சொல்லி இருக்கின்றார். அதோடு அவர் பேட்டி கொடுக்கும்போது வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவார் என்பதே பாஜகவின் கொள்கை என்று சொல்லி இருக்கிறார். 


நாங்கள் இப்போது பாஜகவுடன் கூட்டணி இருக்கின்றோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காகதான். ஜெயலலிதா இருந்தேபோதே பிரதமர் ஆவதற்கான அறிகுறிகள் உருவாக்கின. ஆனால், காலத்தின் கட்டாயம் மாறிவிட்டது. 


தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. புரட்சி தலைவர் காலத்தில் இருந்தே தமிழகத்தில் இருந்து ஒருவரை பிரமராக்க வேண்டும் என்று. அமித்ஷா அவர்கள் நேற்று பேசும்போது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பிரதமர் மோடிதான். இதற்கு அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ மறுப்பு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து கூட்டணி இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்றே குறிப்பிட்டார். 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும். அமித்ஷா தமிழரை பிரதமராக்குவோம் என்று சொன்னதை வரவேற்கிறோம். அது எந்த தேர்தலில் நடக்கும் என்று தெரியாது. ஆனால், அப்படி நடந்தால் அதற்கு தகுதியானவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். 90 களில் என்னுடன் நின்று பணியாற்றி இருக்கிறார். அவருக்கு நாடாளுமன்ற அனுபவமும் உண்டு. பல்வேறு தேர்தல்களை முன்நின்று நடத்தி இருக்கிறார். நான்கு ஆண்டு காலம் தமிழகத்தையும், அதிமுகவை காப்பாற்றியவர். அவருக்கு அத்தனை தகுதியும் இருக்கிறது. ” என தெரிவித்தார்.