அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிசிக்கப்பட்டுள்ளது. 


அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கவனித்து வந்தார். அப்போதைய காலகட்டத்தில்  நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் ஒரே ஐ.பி.முகவரியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2021 வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த காலகட்டத்தில் 528 ஒப்பந்ததாரர்களால் 2091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இப்படி தாக்கல் செய்யப்பட்ட 289 டெண்டர்களில் 71 டெண்டர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கணினி மூலம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்ததன் மூலம் ஒப்பந்த புள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்த புள்ளியில் ஒவ்வொரு ஒப்பந்த புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 276 ஒப்பந்த புள்ளிகளில் ஏலத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே ஐ.பி முகவரியில் இருந்து டெண்டர் தாக்கல் செய்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டு வைத்து வெவ்வேறு விலையை குறிப்பிட்டு டெண்டர்கள் தாக்கல் செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  2019ஆம் ஆண்டும் நெடுஞ்சாலைத்துறையின் தாராபுரம் கோட்டத்தில் கோரப்பட்ட டெண்டருக்கு 3 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே விண்ணப்பித்ததும், அவர்கள் ஒரே ஐ.பி.முகவரியில் இருந்து வெவ்வேறு விலையை குறிப்பிட்டு டெண்டர் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


கங்கனம், செண்பகம், சபரி கட்டுமான நிறுவனங்கள் ஒரே ஐபி முகவரி மூலம் 13 டெண்டர்களில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. ரூ.32.5 கோடி மதிப்புள்ள 14 பணிகளில் செண்பகம் கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் 12 பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒப்பந்ததாரர்கள் எழில்மாறன், எஸ்.குணசேகரன், செல்வம், ஹரிவே லைன்ஸ் நிறுவனம் இணைந்து 63 பணிக்கு அனைத்து டெண்டர்களையும் தாக்கல் செய்துள்ளனர்.  63 பணிகளில் ரூ.175.57 கோடி மதிப்பிலான 45 பணிகள் இந்த 3 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


சில ஒப்பந்ததாரர்கள் வெவ்வேறு பெயரில் நிறுவனம் தொடங்கி மற்றவர்கள் ஏலத்தில் பங்கேற்காதவாறு டெண்டர் தாக்கல் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கலம் உட்கோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.21 கோடி பணிகள் முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், செய்யாதுரை கட்டுமான நிறுவன நிர்வாக பங்குதாரராக செய்யாதுரையும் மற்ற பங்குதாரர்களாக அவரது 4 மருமகள்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


செய்யாதுரையின் மகன் பாலசுப்பிரமணியன் நடத்தும் எஸ்.பி.கே.நிறுவனத்தில் செய்யாதுரை மனைவி அவரது 3 மகன்கள் பங்குதாரர்கள் எனவும், செய்யாதுரை எஸ்.பி.கே கட்டுமான நிறுவனங்கள் விதிகளை மீறி டெண்டர்களை பெற்றதாக சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 


செய்யாதுரை நிறுவனங்களுக்கு 2020-ல் வழங்கிய 3 பணி ஒப்பந்தங்களின் மதிப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.