ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பேரவையில் இருந்து வெளியேறியது. 


மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அப்படி எதுவுமே நடக்கவில்லை என இந்த சம்பவத்திற்கு காவல்துறையும் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் பேரவையில் இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததோடு, பேரவையில் இருந்து அதிமுகவினருடன் வெளி நடப்பு செய்தார்.


குற்றசாட்டுகளை அடுக்கிய இபிஎஸ்


வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், “ தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆளுநர் மீது தாக்குதல் நடக்கும் முயற்சியை ஏன் முன்கூட்டியே உளவுத்துறை கணித்து கூறவில்லை.ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்தவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். 


விளக்கம் அளித்த முதல்வர்


இந்தப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். அதில், ஆளுநரின் வாகனம் மீது கருப்புக்கொடியோ, கற்களோ வீசப்படவில்லை என காவல்துறையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அரசின் விளக்கங்களை கேட்டு, அதன் பின்னர் அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்திருந்தால் சரி. 
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சொன்ன முன்னாள் முதல்வர் இபிஎஸ் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று அவர் பேசினார்.