திமுகவின் செல்வாக்கு மிக்க அமைச்சரான செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கைதான செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்திக்க அதிமுகவின் மூத்த தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர்.
திமுக ஆட்சியில் முறைகேடாக 30,000 கோடி ரூபாயை சேர்த்ததாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட அதிமுக மூத்த தலைவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், விஜயபாஸ்கர் ஆகியோர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர்.
இரண்டு நாள்களில் தலைகீழாக மாறிய அரசியல் சூழல்:
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் அவரின் தலைமைச்செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
அப்போது அவர் அதிகாரிகளிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதால் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டு விட்டு, ஜூன் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்:
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை குழுவும் ஆராயலாம் எனத் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்படுகிறார் செந்தில்பாலாஜி. செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.