திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் KPK ஜெயகுமார். கடந்த 02.05.24 ம் தேதி மாலை வீட்டில இருந்து வெளியே சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கூறி உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரின் புகார் அளித்திருக்கிறார்.
காங்கிரஸ் முக்கிய நிர்வாகி மரணத்தில் தொடரும் மர்மம்:
மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை தேடினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைச்சுத்துபுதூரை சேர்ந்த KPK ஜெயக்குமாரின் குடும்ப பின்னணி நீண்ட கால காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது.
காணாமல் போன ஜெயக்குமாரின் தந்தை, காங்கிரஸில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராக பதவி வகித்தவர். தற்போது ஜெயக்குமாரின் சகோதரர்களும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர்.
ஜெயக்குமார் கட்சி தாண்டி கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைகள் அமைப்பது என தொழில் செய்து வந்தார். இதற்கு முன்பு நடந்த தேர்தலின் போதும் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், காங்கிரஸ் கட்சிக்காக அதிக அளவில் நிதி செலவிட்டவர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே KPK ஜெயக்குமார், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தனக்கு நேரிலும் போனிலும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உட்பட சில நபர்களின் பெயர் விவரங்களை எழுதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர்:
இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட எஸ்.பி. தெரிவித்திருந்தார். முக்கிய திருப்பமாக தற்போது ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.
தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.
ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்றார்.