திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியனின் மறைவு, அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பசாமி பாண்டியனின் அரசியல் பயணம்

எம்.ஜி.ஆர் காலம் முதல் அரசியல் செய்துவந்த கருப்பசாமி பாண்டியன், 1977-ல் ஆலங்குளம் தொகுதியிலும், 1980-ல் பாளையங்கோட்டை தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆளும் கருப்பு, பெயரும் கருப்பு, ஆனால் உள்ளமோ வெள்ளை என எம்.ஜி.ஆர் இவரை பாராட்டியுள்ளார். பின்னர் ஜெயலலிதா காலத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். பின்னர், 1996-ல் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், திமுகவில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து, 2006-ல் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர், 2015-ம் ஆண்டு திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், 2016-ல் மீண்டும் அதிகமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். தொடர்ந்து, தினகரன் கட்சியின் உயர் பதவியில் அமர்த்தப்பட்டதை எதிர்த்து, 2011-ல் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், 2018-ல் திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், மீண்டும் திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன். ஆனால், பலமுறை கோரிக்கை வைத்தும், அவருக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், 2020-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானாத அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு, அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.