இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

டெல்லிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியது. இந்த சூழலில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி:
தமிழ்நாட்டில் இன்னும் 14 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றன. குறிப்பாக, பலமான கூட்டணி அமைக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ஆட்சியில் உள்ள திமுக, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் என பலமான கூட்டணியின் மூலம் தொடர் வெற்றியை பெற்று வருகிறது. அதற்கு நேர்மாறாக, நிலையற்ற கூட்டணியால் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
2019 மக்களவை தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, 2024 மக்களவை தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், பெரும் தோல்வியே அதற்கு மிஞ்சியது.
டெல்லியில் பரபர மீட்டிங்:
இந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மூத்த தலைவர்கள் கே. ஏ. செங்கோட்டையன் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையே மோதல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செங்கோட்டையன் பின் நின்று பாஜக அவரை இயக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது குறித்து நாளை பேசுகிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இதுகுறித்து நாளை பேசுகிறேன்" என செய்தியாளர்களிடம் கூறினார்.