முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மன்னிப்பே கிடையாது என, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிஒத்துள்ளார்.


ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு:


சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் சந்திப்பு மற்றும் அவர்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


நகைச்சுவையான சந்திப்பு


அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் “ காய்ந்த கொள்ளைபுறத்தில் குதிரை மேய்ந்தால் என்ன? கழுதை மேய்ந்தால் என்ன?.  அதனால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் சந்திப்பு என்பது நீண்ட நாட்களாக சந்திக்காமல் உள்ள கவுண்டமணி - செந்தில் திடீரென சந்திப்பதை போன்றது. அதுவும் நகைசுவையும், கோமாளித்தனமும் நிறைந்த சந்திப்பாக தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் சந்திப்பை தமிழகம் வியந்து பார்க்கிறது. 


தர்மயுத்தம் எதற்கு?


ஓபிஎஸ் முதலில் யாருக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கி, அவர்களுக்கு மாஃபியா கும்பல், தமிழ்நாட்டை சூறையாடிய குடும்பம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். டிடிவியை பொறுத்தவரையில் அவரை போன்று ஒரு கிரிமினலை பார்க்க முடியாது, அவரை போன்று ஒரு அரசியல் வியாபாரியும் கிடையாது எனவும் சாடினார். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் உள்ளதாகவும் கூறினார். இப்படி எல்லாம் பேசிவிட்டு மீண்டும் வந்து அதிமுகவில் இணைந்தார்.


அந்தர் பல்டி


ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், இறுதியில் தனக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை என அந்தர் பல்டி அடித்தவர் தான் ஓபிஎஸ். அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் தான் ஓபிஎஸ். அதிமுக ஆட்சி இருந்தபோதே, மறைமுகமாக டிடிவி தினகரனை சந்தித்து தன்னை முதலமைச்சராக்கும்படி கோரிக்கை விடுத்தவர் தான் அவர். 


”அதிமுகவில் இடமில்லை”


எனவே இவர்களின் சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த தாக்கமும் கிடையாது. ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலாவிற்கு என்றுமே அதிமுகவில் இடம் கிடையாது. அவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. பாஜக மூலம் அவர்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், பாஜக எங்களுக்கு அப்படி ஒரு நிர்பந்தத்தை கொடுக்காது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி எனும் ரெண்டு அமாவசையும் ஒன்று  சேர்ந்தால், ஒட்டுமொத்த தமிழகமும் இருட்டாகிவிடும். டிடிவி-யே சில காலங்களில் ஓபிஎஸ்-ஐ கழற்றிவிடுவார். அவரை நேரில் சென்று சந்தித்த விவகாராத்தில் ஓபிஎஸ் மீது அவருடன் இருக்கும் ஒரு சிலரே அதிருப்தியில் இருப்பதாகவும்” ஜெயக்குமார் தெரிவித்தார்.