சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் சூழலில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், அதிமுக-வில் நடக்கும் உட்கட்சி மோதல் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிய செங்கோட்டையன் - இபிஎஸ் மோதல்:
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சராக ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்:
திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், அதிமுக-விற்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும். எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பழனிசாமிக்கு முன் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டுமே செங்கோட்டையனுக்கு உள்ளது. முதலமைச்சர் வாய்ப்பு இரண்டு முறை வந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அதை ஏன் விட்டுக்கொடுத்தார் என்பதையும் சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா இருக்கும்போதே செங்கோட்டையன் முதலமைச்சராக ஆசைப்பட்டார். அதை கட்சி நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் சொன்னதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
கூஜா:
கொடநாடு வழக்கில் பழனிசாமி குற்றவாளி என்றால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன்? குற்றவாளி என்றால் கைது செய்திருக்கலாமா? திமுக-வுக்கு தரிாணி இருந்தால் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இதைச் செய்திருக்க வேண்டும். அதிமுக-வில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன் துரோகிகளுடன் சேர்ந்து கூஜாவாக கூஜா தூக்கச் சென்றுவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக-வின் முக்கிய மற்றும் மூத்த தலைவரான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீ்க்கப்பட்ட சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதன்பின்பு அவரது பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், தேவர் ஜெயந்தியில் தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் இணைந்து மரியாதை செலுத்தியதுடன் அவர்களுடன் இணைந்து பேட்டி அளித்தார். இதையடுத்து, அவரது பதவி பறிக்கப்பட்டது.
ஏ1 குற்றவாளி:
இதையடுத்து, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு தர வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்றும், தனக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தும் முதலமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறியதாகவும் கூறினார். மேலும், கொடநாடு வழக்கில் இபிஎஸ்தான் ஏ1 குற்றவாளி என்றும், அவர் அதற்கு குரல் எழுப்பாதது ஏன்? என்றும் பேசினார்.
செங்கோட்டையன் பேட்டி அளித்த சில நிமிடங்களில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலே அமைச்சர் பதவி பறிப்புக்கு ஆளானவர் என்றும், தானே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதாகவும் கூறினார்.