விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான்.  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கான வழக்குகளில் ஆஜரான, வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எவ்வித அனுமதியுமின்றி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது *நீதிபதி நகைச்சுவையாக, "ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?*" என கேள்வி எழுப்பினார்.




அதற்கு வழக்கறிஞர் மாரீஸ்குமார், *" நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்பே தெரியவரும்"* என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி, ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டார். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை செல்போன் வாயிலாக அழைத்து, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டதை உறுதி செய்தார். அந்த குழுவின் தலைவர் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் என்பதையும் உறுதி செய்து, அவற்றைப் பதிவு செய்து கொண்டார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரில்,  வீட்டில் சோதனை செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.


அதற்கு சிவபாலன் தரப்பில், மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி, வழக்கறிஞரின் வீட்டினுள் சென்று சோதனை செய்தீர்களா? சோதனைக்கான வாரண்ட் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.அதற்கு காவல்துறை தரப்பில்,"இல்லை" என பதிலளிக்கப்பட்டது.


அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தவையன்று நடந்தவற்றை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, சோழவந்தான் காவல் ஆய்வாளரை மதுரை நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்


 




 

சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கு- தென்காசி துணை கண்காணிப்பாளர் பதில் தர உத்தரவு 







 

 

தென்காசியைச் சேர்ந்த சங்கர்ராம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழரின் கலைகளில் ஒன்றான வெற்றுக்கால் சேவல் சண்டையை வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடம் நீதிமன்ற வழிகாட்டலின்படி சேவல் சண்டை நடைபெற்றது. அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  ஜனவரி 15 ம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே, தைப்பொங்கலை முன்னிட்டு வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் ஜனவரி 15ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டும் சேவல் சண்டை எங்கு நடைபெறுகிறது என்பதை குறிப்பிட்டு மனு வழங்காததாலும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர்கள் தரப்பில் சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டப்படாது. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தப்படாது என்பது போன்ற பல உறுதிகள்  வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஜனவரி 11ஆம் தேதிக்கு முன்பாக மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.