கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பியாக இருந்த வசந்த் & கோ நிறுவனர் வசந்தகுமார் காலமானதை அடுத்து, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி, பாஜக சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் அவரது மகனான விஜய் வசந்த் எனப்படும் விஜயகுமார்.
மக்களவை எம்.பியாக பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். குறிப்பாக, கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்றம் நடைபெற்ற 18 நாட்களும் அவையில் முழுமையாக பங்கேற்று, 100 % வருகையை பதிவு செய்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி தொடர்பாக நடந்து முடிந்த இந்த கூட்டத்தொடரில் மட்டும் மொத்தம் 30 கேள்விகளை எழுப்பியுள்ள விஜய் வசந்த், குறிப்பாக, கன்னியாகுமரி சுற்றுலாத்தலமாக இருப்பதால், பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் பழுதடைந்த சாலைகளை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும், மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
அதேபோன்று, தனது தொகுதியை மேம்படுத்த துறைவாரியாக மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளார். நிதின் கட்கரியை சந்தித்து சாலைகளை செப்பனிட வேண்டும் என்றும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிக வகுப்பு பிரிவுகள் ஒதுக்குவது குறித்தும் குமரி மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மார்த்தாண்டத்தில் துவங்குவது பற்றியும் கோரிக்கையை வைத்திருக்கிறார்.
அதேபோல், புதிய ரயில்கள், புதிய வழித்தடங்கள், ரயில் நிலையங்களின் மேம்படுத்துதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்துள்ளார் விஜய் வசந்த்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவிடம், சுற்றுலாத்தலங்கள் மிகுந்த கன்னியாகுமரியில் ஒரு விமானநிலையம் அமைப்பதன் முக்கியத்தை விளக்கியும், சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும் வணிகப் போக்குவரத்திற்கு உதவிடும் வகையில் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்.
தன் தந்தை குமரி தொகுதிக்காக செய்ய வேண்டிய பணிகளை நான் செய்து முடிப்பேன் என தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய் வசந்த், அதை செய்து முடிக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றே கூறுகின்றனர் அவரது தொகுதி மக்கள்.