"ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது”
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமி, "அதிமுக தலைவர்கள் பற்றி கடுமையான பாஜகவினர் விமர்சனம் செய்தார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம். உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததால் தொண்டர்கள் கோபமடைந்தனர். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்ட செயலாளர்கள் எடுத்துரைத்தனர். பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.
ஆனால், தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகவுடனான அதிமுக கூட்டணி சேரும் என்று மு.க.ஸ்டாலின், உதயநிதி கூறி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய பயத்தில் திமுகவினர் பேசி வருகின்றனர். கூட்டணி முடிவை அறிவித்த உடன் திமுக தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து பேசுவது பயத்தின் வெளிபாடு. எந்த காரணத்திற்காகவும் பாஜகவுடனான கூட்டணி ஒருபோதும் இருக்காது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்” என்றார்.
"அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை"
தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு கட்சியின் மாநில தலைவரை நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக நினைக்கிறேன். எனவே, அண்ணாமலையை மாற்ற கோரிக்கையையும் வைக்கவில்லை. அந்த கேள்விக்கும இடமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை. நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். முதிர்ந்த ஒரு அரசியல் கட்சி எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கேட்காது” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
யார் பிரதமர் வேட்பாளர்? - மழுப்பிய முனுசாமி:
மேலும், ”எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இருக்காது. 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் மட்டுமின்றி, 2026ல் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்காது. இந்த இரண்டு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்றார் முனுசாமி. இதனை தொடர்ந்து, "மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மாநில உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாய்க் எந்த கட்சியையோ, பிரதமர் வேட்பாளரையோ ஆதரிப்பதில்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்” என்றார். பாஜகவுடன் கூட்டணி இல்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு முனுசாமி மக்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.