கல்லூரி மாணவர்களில் பாதிப் பேர்கூட முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தினால்தான் அவர்களுக்குக் கல்லூரி வர அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பின்பற்ற வேண்டிய கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (10.12.2021) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உயர் கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது :
’’கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் சூறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்பொழுது பொது சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, கல்லூரிகளில் சமூக இடைவெளியுடன் சுழற்சி முறையில் வகுப்பறைகள் நடத்திடவும், முகக்கவசம் அணிதல், அவ்வப்பொழுது கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினிகள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ஒரு மாணவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 9 மாணவர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் தீவிரப்படுத்தி தொற்று பரவாமல் கட்டுப்படுத்த கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திய மாணவர்களை மட்டுமே வகுப்பறைகளுக்கு அனுமதிக்கும்படி உயர் கல்வித்துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காரணம் இதுவரை கல்லூரிகளில் 46% மாணவர்கள் மட்டும் முதல் தவணை தடுப்பூசியும், 12% மாணவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழத்திலும் 100% மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளுக்கு அனுமதி வழங்க உயர் கல்வித்துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்