சாதிவேறுபாடற்ற கிராமங்களுக்கு 10 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை, சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு நிதி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை இன்று நடைபெற்றது. அதில் பேசிய அவர் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த அறிவிக்கை பின்வருமாறு,
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும்; ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகிற அரசாக விளங்கியிருக்கிறது சமூகத்தில் சதிகளாலும், சாதிகளாலும் புறக்கணிப்பட்டவர்களை அன்புக்கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் திறமைகளையும், அவர்களால் சமூகம் பெறத்தக்க பங்களிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறையை எப்போதும் காட்டி வரும் கொள்கைப் பிடிப்பைக் கொண்ட முன்னேற்றக் கழகம், இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதி திராவிடர்களுக்குக் கான்கிரீட் கூரையிலான தொகுப்பு வீடுகள். இரட்டைக் குவளை முறை ஒழிப்பு. சமத்துவபுரங்கள், சமத்துவ மயானத்திற்கு ஊக்கத் தொகை, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவே முடியாமலிருந்த பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்கலம் கொட்டகச்சியேந்தல், ஆகிய இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சமத்துவப் பெருவிழா கொண்டாடியவை போன்ற எண்ணற்ற செயல்பாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாக இயம்ப இயலும்
முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டுமென்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய விதி இதில் முன்பெல்லாம் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளையும், ஆதரவுக் கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் மட்டுமே அழைத்து நடத்தப்பட்ட கூட்டம்போல் இல்லாமல் அனைத்து இயக்கங்களையும் சார்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை குழு உறுப்பினர்களாக அமைத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாணையை நாங்கள் வெளியிட்டோம் அவர்களையெல்லாம் அழைத்து ஆகஸ்டு மாதம் 19ம் நாள் கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும், ஒருங்கிணைந்த பார்வையை மக்கள் பிரச்சினைகளில் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம் பேரறிஞர் அண்ணா 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று சொல்லியதை இதயத்தில் ஏற்றி ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து எங்கிருந்து வந்தாலும் அதை வரவேற்றுச் செயல்படுத்தி எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம் அந்த அடிப்படையில், அந்தக் கூட்டத்திலே பல நல்ல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன முதல் கட்டமாக அவற்றில் சிலவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணி இம்மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.
மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் 'தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும் (மேசையைத் தட்டும் ஒலி) அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்
இரண்டாவதாக, அக்கூட்டத்தில் ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளைப் பொது நீரோட்டத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. முதற்கட்டமாக, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள். அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் ஆனால் பள்ளிகளை நிருவகிப்பது தொடர்ந்து ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் கைவசமே இருக்கும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிருவாகப் பணிகளைக் கையாளுதல் போன்றவற்றை அத்துறையே செயல்படுத்தும். பள்ளிக் கல்வித் துறை அவற்றில் தலையிடாது.
மூன்றாவதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்குத் தற்சமயம் தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன மேலும் நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
ஆகஸ்டு திங்கள் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்னும் நான்கு புதிய நீதிமன்றங்களை சேலம் கிருஷ்ணகிரி, மதுரை. திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் இந்த நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
நான்காவதாக. முறையான சமுதாயக் கண்ணோட்டத்துடன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை அணுகி முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் 'சமத்துவம் காண்போம்' என்கிற தலைப்பில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.
ஐந்தாவதாக தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதிவேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
ஆறாவதாக.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும் அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்.
விழிப்புணர்வுக் கூட்டமே தேவையில்லை என்கிற நிலையை அடைவதே நம் இலக்கு தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடைமாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கேற்ப 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ஒப்பற்ற தத்துவத்தின்படி இணைந்து வாழ அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க அமைகிறேன். வணக்கம். வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டு