சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிற்பித்த கைது உத்தரவை ரத்து செய்து அதிரடி காட்டியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு என்ன.?

திருவள்ளூரில், காதல் விவகாரம் ஒன்றில், சிறுவன் ஒருவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், ஏடிஜிபி ஜெயராமன், தனது கைது மற்றும் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயன், மன்மோகன் ஆகியோர் அங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நிதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை அதிரடியாக நீதிபதிகள் ரத்து செய்தனர். அதேபோல், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்விற்கு மாற்றவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட அரசின் உத்தரவை வேறு வழக்கின் மூலம் ஏடிஜிபி ஜெயராம் சந்திக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயன், மன்மோகன் ஆகியோர் அங்கிய அமர்வு இந்த அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி

திருவள்ளூரில், காதல் விவகாரத்தில் பெற்றோரை மிரட்டுவதற்காக, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியோடு கூட்டு சேர்ந்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை தன்னுடைய அரசு காரை பயன்படுத்தி கடத்திய வழக்கில்தான் வசமாக சிக்கியிருக்கிறார் ஏடிஜிபி ஜெயராமன். சாதாரண ஒரு போலீஸ் மீது புகாரோ, குற்றச்சாட்டுகளோ வந்தால் கூட, போலீஸ் என்பதால் அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வழக்கம் புரையோடிப்போயிருக்கும் சூழலில், உயர் அதிகாரியான ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டு அதிரடி காட்டினார், உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான ஜெயராமனை நீதிமன்றத்தில் வைத்தே காவல் சீருடையில் அவர் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தனது கைது மற்றும் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டி, அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன.?

முன்னதாக, ஏற்கனவே நேற்றைய விசாரணையின்போது, பயிணிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கின் விசாரணை உச்சநிதிமன்றத்தில் நடைபெற்றபோது, சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், ஜெயராமனின் பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது என்றும், விசாரணை முடியும் வரை அவர் இடைநீக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று விதிகள் சொல்வதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில்தான், இன்றைய விசாரணை முடிந்து, உச்சநிதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.