அதானி-காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு முன்னாள் அதிகாரிகளின் குழு கடிதம் எழுதியுள்ளது.
10 அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில், "இது மாநிலத்திற்கு நல்லதல்ல. அதானியின் வணிகத் திட்டம் 99 வருட சலுகைக் காலத்தால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியமானது என்று சொன்னால், அதே திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், தமிழக அரசுக்கு ஆபத்து உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தை உறுதி செய்த தெய்வசகாயம், துறைமுக திட்டம், கடல் அரிப்பு, வாழ்வாதார இழப்பு மற்றும் மாசுபாட்டிற்கு அஞ்சும் உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளதாக கூறினார். இந்த திட்டத்தால் நகரத்திற்கு வழங்குகின்ற நீர்நிலைகளில் உப்புத்தன்மை ஊடுருவலை மோசமாக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த துறைமுகம் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தால் ஜூன் 2018இல் ரூ.4௦௦௦ கோடி முதலீடு செய்யும் திட்டத்துடன் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் துறைமுகத்தை 6110 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் முடிவு செய்தது. இதன் காரணமாக விரிவாக்கம் நடைபெறும் இடத்தைச் சுற்றி மீன்பிடி தடை விதிக்கவும் அதானி நிறுவனம் அரசுக்கு வலியுறுத்தி வந்தது.இதனால் அந்தப் பகுதி மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடல் வாழ் உயிரினங்களின் அழிவு ஏற்படும் என்றும் தொழிற்சாலைக் கட்டுமானங்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணூரின் சுற்றுச்சூழல் மேலும் கேள்விக்குறியாகும் என்றும் மக்கள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.