Vijay Wishes Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ” இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள,  மாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.






எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி..!


2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 99 இடங்களில் வென்று மீண்டு வந்துள்ளது. இதற்கு ராகுல் காந்தியின் தீவிர பரப்புரை முக்கிய காரணமாகும். இருப்பினும் கடந்த 2019 தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, பெரிய பதவிகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வந்தார். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஏற்க மறுத்தார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் தான், ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திமுகவிற்கு நோ..!


தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாக, கடந்த பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளும் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றில் வெளியான அறிக்கைகளில் பெரும்பாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகளை தொடர்பான வாழ்த்துச் செய்திகளாகவே இருந்தன. தொடர்ந்து மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியானபோது, விசிக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், திமுக எம்.பிக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் தமிழ்நாடு அரசியலில் தங்களின் எதிரி திமுக தான் என விஜய் வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


காங்கிரசுக்கு எஸ்..!


இதனிடையே, மோடி பிரதமராக பதவியேற்றபோது கூட அவருக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமே விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவர் சார்ந்த பாஜக கட்சிக்கு எந்தவித வாழ்த்தும் கூறவில்லை. இந்நிலையில் தான், திமுகவை புறக்கணித்தாலும், அவர்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அவர்களது மூத்த தலைவரான ராகுல் காந்திக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசியலில் திமுகவை எதிர்த்தாலும், தேசிய அரசியலில் அவர்களுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் இணக்கம் காட்ட முயற்சிப்பதை உணர முடிகிறது.