அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகை கஸ்தூரி என்ன பேசினார்?
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பிராமண சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலித் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை போன்று பிராமண சமுதாய மக்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்புதான் முதல் கொள்கையாக உள்ளது எனக் கூறிய அவர், ஒவ்வொரு சமுதாயமாக பிளவுபடுத்த முயற்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை:
பிராமணர்கள் குறித்து பேசிய அவர், பல்வேறு விதமாக அவர்கள் விமர்சிப்பதாக கூறினார். இங்கு, தெலுங்கு பேசுபவர்களாக உள்ளவர்கள், மன்னர்களின் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதையடுத்து, தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்த கஸ்தூரி, "தமிழர்களிடையே பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை செய்து மோசடியில் ஈடுபடும் திராவிட புலம்பெயர்ந்த ஏமாளிகளின் இரட்டை நிலைப்பாட்டை நேற்று அம்பலப்படுத்தினேன்.
தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிரானவர் என என்னை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வதன் மூலம் திமுகவினர் என்னை சீண்ட முயல்கின்றனர். தெலுங்கர்களுக்கு எதிராக நான் பேசியதாக போலியான செய்திகளை அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.