சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் பெண் சாமியாரின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதியில்லாமல் திடீரென கூட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னபூரணி அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இன்னொரு பெண்ணின் கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டிருந்ததாக அன்னபூரணி மீது அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டிருந்தது. அவரும் அதை ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அன்னபூரணி, தனது திடீர் அவதாரம் குறித்து தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு கூறியிருப்பதாவது, “ அந்த பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்கிறது நினைக்கிறேன். அந்த வீடியோக்களை எல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம் மக்கள் ஏமாந்து போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
அன்னபூரணியின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்து பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது மிக மிக தவறான விஷயம். முட்டாள்தனமும் கூட.
சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற தயாராக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில் எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் வேண்டாம். அனைத்திலும் இருக்கிறார்கள். அதனால், “நான் கடவுளின் அவதாரம்” என்று கூறிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது” இவ்வாறு அவர் கூறினார்.
ஆதிபராசக்தி அம்மனின் அவதாரம் அன்னபூரணி அரசு அம்மாதான் என்று இவரது சீடர்கள் கூறி வருகின்றனர். தற்போது அவர் அளித்த பேட்டிகளும், அவரது செயல்பாடுகளும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வைரலாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்