கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் நடிகை குட்டி பத்மினியின் கருத்துக்கு நடிகை அபிராமி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகக் கூறி கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை விடமாட்டோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 பேராசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.
இந்த போராட்டத்தின்போது நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான அபிராமி, கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக பேட்டியளித்தார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக செயல்பட தன்னை பேராசிரியர்கள் நிர்பந்திப்பதாக கூறி சென்னை காவல்துறையில் அபிராமி புகார் மனு அளித்தார். பின்னர் பேட்டியளித்த அவர் “நான் 2015-19 வரை பயின்ற காலத்தில் பாலியல் சீண்டல்கள் எதுவும் நடைபெற்றதில்லை. இதுகுறித்து நான் விளம்பரத்திற்காக பேசி வருவதாக பலர் கூறி வருகின்றனர், அதில் உண்மையில்லை. "கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை" என்று நடிகை அபிராமி கூறினார்.
இதனை விமர்சித்துள்ள நடிகை குட்டிபத்மினி, “கலாஷேத்ரால நாட்டியம் கத்துக்கிட்டதால நீயும், அந்த ரேவதி மேடம் மட்டும் தான் உண்மை சொல்றீங்க, அந்த நூறு பெண்களும் பொய் சொல்றாங்களா. இதெல்லாம் நியாயமா இருக்கா? நீங்க சினிமாவுக்குப் போய்ட்டதால உங்கள ஒருத்தர் தொடுறது, கட்டிப்புடிக்கிறது டேக் 1 டேக் 2 டேக் 3-ன்னு எடுத்துக்கிட்டே இருக்குறதால உங்களுக்கு ஒரு ஃபீலே இருக்காது. இங்க இருக்க பெண்கள் நல்ல குடும்பத்துல பிறந்து, நல்ல ஆசிரியராகவோ குடும்பத்தலைவியாகவோ போகப்போறாங்க. அவங்களோட மனவேதனைய எப்படி இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க. எனக்கு பத்திக்கிட்டு வருதுங்க” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை அபிராமி, “நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களைத் தொடுவது என்பது எந்த ஃபீலும் உங்களுக்கு இருக்காது. ஆனால் மற்ற பெண்களுக்கு அப்படியா என்று நடிகை அபிராமியை பார்த்துக் கேட்கிறார் குட்டிபத்மினி. பெண்களுக்காக குரல் கொடுக்கும் லட்சணம் இதுதான்.
திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களைப்போன்று கிடையாது ஆண்ட்டி. நீங்கள் எதையும் உணரவில்லை என்பது சோகமானது. மேலும் ஒரு விஷயம், உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி. நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. வயசான காலத்துல உங்களோட உடல்நலத்தைப் பார்த்துக்குங்க” என்று விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.