பொது தேர்வு முடிவுகள்
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ் அப் மூலம்
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட தலைவர்கள் தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு எண் , பிறந்த தேதி, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள், ஆதார அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டம்
குறிப்பாக அனைத்து மாவட்ட தலைவர்களும் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட, அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்கள் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த உதவித்தொகை ஏழை மாணவர்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விஜய் தன் கையாலே பரிசுகள் மற்றும் உதவி தொகைகளை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் மற்றும் சந்திப்பு கூட்டம் என்பது சென்னையில் நடைபெறும் என்றாலும் இந்த கூட்டத்தை திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய அறிவிப்பு
முன்னதாக , கடந்த வாரம் , விஜய் மக்கள் இயக்கத்தின், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நமது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உறுதி செய்து அதற்கு தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
தயார் நிலையில் இருங்கள்
இத்துடன் அனுப்பிய படிவத்தினை தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு படிவத்தினை அளித்து பூர்த்தி செய்து அனைத்தையும் 15 நாட்களுக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும். தங்கள் மாவட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது என்னிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல்களை குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.