தெலுங்கானா ஆளுநரும், புதுவையின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் இன்று மாலை கலந்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சகோதரர் ரகுபதி சொன்ன பதிலில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், அவர் சொன்ன பதிலில், "நாம் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம். இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கே நாம் வாழ்த்து சொல்லிவிட்டோம் என்று சொன்னால், நமக்கே நாம் வாழ்த்து சொன்ன மாதிரி" என்று, 'இந்து' என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்திற்கு வாழ்த்துக்களே சொல்ல மாட்டேன் என சொல்லிக்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையை சேர்ந்த ஒருவரே, 'இல்லை நான் இந்துதான்' என பிரகடனத்தை செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி.


அதே நேரத்தில், நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நாம் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்லையா... அது அம்மாவால் பிறந்த குழந்தைதான். அதற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னால், அது அம்மாவிற்கே சொன்ன மாதிரியா? ஏன் இந்த பாகுபாடு என்று கேட்கிறோம். வேறுபாடு பார்ப்பது திராவிடம் அல்ல என்று சொல்கிறார் அல்லவா; பிரித்து பார்ப்பவர்களால் திராவிடம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது என சொல்கிறார்கள் அல்லவா... பிரித்து பார்ப்பதால் தானே நீங்கள் வாழ்த்துச்சொல்ல மறுக்கிறீர்கள். ஆனால், இன்று புதியதாக ஒரு வியாக்கியானம் சொல்லி இருக்கிறார்கள். 'இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கே நாம் சொல்லிக்கொண்டால், அது நமக்கே சொல்லிக்கொள்கிற மாதிரி' என்று. இது உலகத்திலியே இல்லாத ஒரு காரணமாக இருக்கிறது. இதில் சிரிக்க தவற வேறேதுமில்லை. ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்ல முடியாது. அவருடைய பையன் கதிர்க்கு வேண்டுமானால் அறிவுறுத்தல் வழங்கலாம்.


ஆனால், ஆளுநருக்கு அப்படி அவர் அறிவுறுத்தல் வழங்க முடியாது. ஆளுநர் அவருடைய பணியினை செய்கிறார். அவருடைய கருத்தில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்துக்கு கருத்தை வைத்து பதில் சொல்லலாம். அதற்காக, ராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் கடுமையாக  விமர்சனம் செய்வது சரியல்ல. அப்படியென்றால், நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது, ஆளுநரை சந்தித்து இருக்கவே கூடாது. அப்போது ஆளுநர் தேவையாக இருந்தார், இன்று தேவையில்லாமல் இருக்கிறார். அதனால், நீங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். அவரவர்களுக்கு தனி கருத்திருக்கலாம். உங்களுடைய கருத்து, இல்லை அப்படி என்று சொல்லிவிட்டு போங்கள். அதற்காக இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தீர்கள் என்று சொன்னால் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்" என்றார்