தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 


கட்சி கொடி அறிமுகம்?


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில், வரும் 22ம் தேதியான வியாழக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை அதிரடியாக மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நிதானமாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். த.வெ.க. தலைவராக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


விரைவில் அரசியல் மாநாடு:


இந்த சூழலிலே, வரும் 22ம் தேதி கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் த.வெ.க. நிர்வாகிகள் முன்பு அவர் கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் மாநாட்டில் தனது கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்த்த விஜய்யின் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், கட்சி கொடி அறிமுகமாக இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகளே இருப்பதால் நடிகர் விஜய் இனி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த கடந்த சில மாதங்களாக தக்க இடத்தை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆய்வு செய்து வந்தனர்.


அரசியல் பணிகளை தீவிரப்படுத்தும் த.வெ.க.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் அரசியல் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் நடத்தவே இடம் கிடைத்துள்ளதால் அங்கு நடத்தப்படும் என்று முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. கோட் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள விஜய் சில மாதங்களிலே தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்க திட்டமிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தீவிர கள நடவடிக்கைகளில் தமிழக வெற்றிகழக கட்சியினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.