ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 


சூர்யா மகிழ்ச்சி:


இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் கன்னடத்தின் கம்பாள கலாச்சாரத்திற்கும் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்து மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகின்றேன்.. இரு மாநில அரசிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை:


தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன் எழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.


இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று ஒருமித்த தீர்ப்பு வழங்கியது. அதில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தலையிட முடியாது:


ஜல்லிக்கட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. அதேபோல, காளைகளுக்கும் உடல்ரீதியாக கடுமையான தாக்கங்களை விளைவிக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை, அவை கட்டாயப்படுத்தி ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கடந்த 5 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து சேகரித்து கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜல்லுக்கட்டு என்பது ஒரு கொடூரமான விளையாட்டு" என்று பீட்டா தனது வாதத்தை நீதிமன்ற அமர்வு முன்னிலையில் முன்வைத்தது.


ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம் என்றாலும்,  விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.