சிவாஜி கணேசன் பிறந்தநாள்:


தமிழ் திரையுலகில் 'நடிகர் திலகம்' என அன்போடு அழைக்கபடும் நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று. சிவாஜி கணேசன் நடிப்பு திறமையயை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்மு பூஷஷ் விருது, தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இன்று தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள், பொதுமக்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை:


இதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  இவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, நாசர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.


இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டரில் பக்கத்தில், "முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின்  இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


சரித்திரம் பேசும் சிவாஜியின் கேரக்டர்கள் 


சிவாஜி ஆத்திகம்,நாத்தீகம் என எந்த விதமான கேரக்டர்கள் கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார். திருவிளையாடல் தொடங்கி திருவருட்செல்வர் , சரஸ்வதி சபதம் , திருமால் பெருமை என பல புராணகால படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் தொடங்கி அன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்கள் பலருடனும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இணைந்து நடித்துள்ளார்.


இன்றைய கால ரசிகர்களுக்கு கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் தெரியும். ஆனால் தனது 100வது படமான நவராத்திரியில் 9 விதவிதமான வேடங்களில் வெரைட்டி காட்டியிருப்பார். ரஜினி, கமல், சத்யராஜ், விஜய் என பல தலைமுறை தாண்டிய நடிகர்களுடனும் நடித்தார். கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான பூப்பறிக்க வருகிறோம் படம் தான் சிவாஜி நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும். அதற்கு சில மாதங்கள் முன்பு தான் ரஜினி நடித்த படையப்பா படம் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். 




மேலும் படிக்க 


HBD Sivaji Ganesan: நடிப்பின் இலக்கணம்.. இந்திய சினிமாவின் பெருமை.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று..!