நடிகர் திலகம் என காலத்துக்கும் கொண்டாடப்படும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 


இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் 


விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பது தான் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர். இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் அவர் தான் கடவுள். அந்த அளவுக்கு நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், ”இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் ” என அன்போடு அழைக்கப்படுபவர். 


தனது 10 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய அவர், ஆரம்ப காலக்கட்டத்தில் தன் உண்மையான பெயரை சுருக்கி வி.சி.கணேசன் என்ற பெயரில் நடித்து வந்தார். நாடக்குழுவில் நாட்கள் செல்ல அவரது நடனம், பிற கலைகளையும் கற்று தேர்ந்தார். இப்படியான சூழலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  சி.என்.அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற மேடை நாடகத்தில் சிவாஜி என்ற கேரக்டரை வி.சி.கணேசன் ஏற்று நடித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தந்தை பெரியார், வி.சி.கணேசனை “சிவாஜி கணேசன்” ஆக மாற்றினார். 


பராசக்தி கண்ட பரம்பொருள் 


1952ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தில் தான் அறிமுகமானார் சிவாஜி. முதல் படமே சிவாஜி எப்பேர்ப்பட்ட கலைஞன் என்பதை ரசிகர்களை அறிய வைத்தது. அவரின் தலை முதல் கால் வரை அத்தனையும் நடிக்கும். உணர்வுகள் மட்டுமல்ல உடலும் ஒரு நடிப்பின் கருவி தான் என்பதை அழுத்தமாக சொன்னார் சிவாஜி கணேசன். 


திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மேலும் நாம் பார்த்திராத வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல புகழ்பெற்றவர்களை கண்முன்னே காட்டியிருந்தார். ஹீரோவாக மட்டுமல்லாமல் எதிர்மறை கேரக்டர்கள், அப்பா, கதையின் முதன்மை கேரக்டர் என தனது நடிப்பு தீனி போடும் எதையும் அவர் விட்டுவைத்தது இல்லை. 


சரித்திரம் பேசும் சிவாஜியின் கேரக்டர்கள் 


சிவாஜி ஆத்திகம்,நாத்தீகம் என எந்த விதமான கேரக்டர்கள் கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார். திருவிளையாடல் தொடங்கி திருவருட்செல்வர் , சரஸ்வதி சபதம் , திருமால் பெருமை என பல புராணகால படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் தொடங்கி அன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்கள் பலருடனும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இணைந்து நடித்துள்ளார்.


இன்றைய கால ரசிகர்களுக்கு கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் தெரியும். ஆனால் தனது 100வது படமான நவராத்திரியில் 9 விதவிதமான வேடங்களில் வெரைட்டி காட்டியிருப்பார். ரஜினி, கமல், சத்யராஜ், விஜய் என பல தலைமுறை தாண்டிய நடிகர்களுடனும் நடித்தார். கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான பூப்பறிக்க வருகிறோம் படம் தான் சிவாஜி நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும், அதற்கு சில மாதங்கள் முன்பு தான் ரஜினி நடித்த படையப்பா படம் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். 


அரசியல் வாழ்க்கை


ஒரு நிகழ்வில் பேசும் சிவாஜி, “அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். அரசியலுக்கு லாயக்கில்லை என்று வெளியே வந்தவன் நான்” என சொல்லியிருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல இன்றைக்கு திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு செல்ல நினைக்கும் பலரும் ஆசான் அவர். ஆனால் தனக்கு அரசியல் வரவில்லை என கோபம் கொண்டு  பிறரை குறை கூற மாட்டார். அவர் மேடை பேச்சுகளிலும் மிகவும் உரிமையோடு தான் மற்றவர்களை பேசுவார். தனக்கு தவறென பட்டால் சூப்பர் ஸ்டாராக இருந்தால் கூட கவலைக் கொள்ளாமல் திட்டுவார். இப்படி சிவாஜி அனைவருக்கும் ஒரு செல்ல அப்பாவாகவே இருந்தார். அவரை அப்படித்தான் நடிகர்களும் அழைப்பார்கள் என்பதை பழைய நேர்காணல்களை பார்த்தாலே புரியும். 


விருதுகளே பெருமை கொள்ளும்


மத்திய, மாநில அரசுகளிடம் அவர் பெறாத விருதுகளே இல்லை என சொல்லலாம். பிரான்ஸ் நாட்டின் அரசு வழங்கும் மிக உயரிய விருதான செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன் தான். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன்,  கலைமாமணி , தேசிய விருது, மாநில அரசின் விருதுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் அவர் இந்திய சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகம் என அன்போடு அழைக்கப்படுகிறார். 


சர்வதேச அளவில் பிரபலம் 


எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்த ஒரே நபர் சிவாஜி மட்டும் தான். இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு மேயராக கௌரவ பதவி வகித்துள்ளார். இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட சிவாஜி கணேசனுக்கு முதல் முதலில் புதுச்சேரியிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சிலைகள் வைத்து மாநில அரசுகள் கௌரவித்தது. 


உண்மையில் மறைந்த பின்பும்  சிவாஜி கணேசன் எல்லா காலத்திலும் கொண்டாடக்கூடிய நடிகராகவே உள்ளார். அவரை இன்றளவும் மறக்க முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். இந்த பிறந்தநாளில் சிவாஜி கணேசனின் பெருமையை மற்றவர்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிர்வோம்..!