தன் கணவர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, நடனமாடி இறுதி அஞ்சலி கொடுத்து வழியனுப்பி வைத்தார் பிரியங்கா சங்கர். இது இணைய வெளியில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.
மனைவி, தன் கணவனின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை விமர்சிப்பவர்கள் பலருக்கும், இருவரும் நடனத்தால் இணைந்த கதை தெரியாது.
நடனத்தின் வழியே பிரியாவிடை
அடிப்படையில் ரோபோ சங்கரும் பிரியங்காவும் சினிமாவில் துணை நடனக் கலைஞர்களாக இருக்கும் போதுதான் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். அந்த வகையில், கணவருக்கு பிரியாவிடையை நடனத்தின் வழியே அளித்திருக்கிறார் பிரியங்கா.
இதுகுறித்து ஜேம்ஸ் நவ யுகன் என்னும் பதிவரின் சமூக வலைதளப் பதிவு இணைய வெளியில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
’’நகைச்சுவைக் கலைஞர் ரோபோ சங்கரின் மனைவி மேடைப் பாடகர் பிரியங்கா, தனது கணவரின் இறுதிச் சடங்கில் சாவுக்கூத்து ஆடியது விமர்சிக்கப்படுவது ஏனோ ??
மனிதனின் மனம்..
வித்தியாசமானது...
பல நேரங்களில் எதற்கும்
கட்டுப்படாத,
தான்தோன்றித் தனமானது.
பரவசத்தில் பட்டை போட்டு,
மாலை அணிந்து
நாக்கை துருத்தி..
அரிவாளோடு ... கடவுள் பெயரால்
ஓடுவது... பக்தி ரசம்.
மலர் படுக்கை
என... கருதி நெருப்பை மிதித்து ....
பாவம் தொலைந்ததாக ...
திருப்திபட்டுக் கொள்வதுண்டு.
பக்த பெரும் கூட்டம்.
இரும்பு வேளை பதப்படுத்தி
உடம்பெங்கும் தைத்து வீரமாக
வலம் வருவது பலருக்கு
வீரவிளையாட்டு.
கத்தியால்... மார்பை கிழித்து...
குருதியை துளித்துளியாய்
கடவுள் பெயரால் கசியவிட்டு,
சிலர் மகிழ்வதுண்டு.
ஏன்.... சதையில் கொக்கியைக்
கோர்த்து சங்கிலியால்
பிணைத்து .... ராட்டினத்தில்
தொங்குவதுண்டு.
மனிதன் இல்லாமல்
இறந்து ..போகையில்....!!
சொந்த ரத்த உறவு,
நட்பு, தோழமை..
உடன் பயணித்தவர் என
வேறு... வேறாக... இறந்த
நபருக்கு.. வாழ்த்தும்..
வழிபாடும். மரியாதையும்
அவரவருக்கு உரிய வழியில்
மாறுபட்டே... இருக்கும்.
சில பேர் உயிரற்ற உடலை ஏறெடுத்தும் பார்க்காத
உறுதி யோடிருப்பர்.
பல பேர் வைக்கும் ஒப்பாரி
நம்மையே அதிசயக்க வைக்கும்
பிரமிப்பான
சம்பவமாக இருக்கும்.
சிலர் பாசம்....செத்துப்போனவரின்
சமாதியில்
சில நாட்கள்
விழுந்து கிடக்க வைக்கும்.
உருளுவது, புரள்வது, ஆடுவது
கண் மண் தெரியாது
மது அருந்திக் கிடப்பது.
இப்படி நூறு ரகங்கள்
சோகத்தின் விழும்பில்
இருப்பது இயற்கையானது.
ஆன்மீக உணர்வு..
நம்பிக்கைகள்
ஒட்டிய எல்லோருமே..
முக்தி, மறுபிறப்பு.
சொர்க்கம்... நரகம்
பாவம்.. புண்ணியம். என்பதை
மையப்படுத்தியே.. உடலை
ஆராதிப்பதுண்டு.
மரணம் என்பதே.. வைதீக
மதத்தின் அடிப்படையான
ஜீவாத்மா, பரமாத்வோடு
ஒன்றிணையும். ஆன்மீக
அடிப்படையில் கொண்டாடப்படும்
சிறப்பு நிகழ்வல்லவா....?.
முக்தி, சொர்க்கம், நரகம்
மறுபிறப்பு சார்ந்த எல்லா
மத நம்பிக்கையோடு,
இணைந்த மையப்புள்ளிதானே.
சிவனே... கூட... சுடுகாட்டு
சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு...
கபால மாலை அணிந்து ருத்ர
தாண்டவக் கூத்தாடும்
முடிவில்லா.. அதிர் வல்லவா..
ரோபோ சங்கரின் மனைவி
மேடை பாடகராக ..
சங்கரோடு ஆடி, பாடியவர்.
காதல் வசப்பட...
அவர்களின் குடும்ப
நிகழ்வுகள் எல்லாம் கூட.
கூத்தடிக்கும் கொண்டாட்டங்களாகவேதான்
எப்போதும் இருந்திருக்கிறது.
வழக்கமான ஆனந்த நடனம்.
இது துக்கமாக பீறிட்டு
உச்சமடைந்த கூத்தாட்டம்.
தமிழகத்தில், இந்தியாவில் உலகத்தில் .. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் வேறு வேறான சடங்குகளும்.
இறப்பும் கொண்டாட்டங்களாக
இருப்பதுதானே எதார்த்தம்.
இதை எதிர்ப்பவர்கள் .
திட்டமிட்ட ...ஒழுக்கம் என்பதை பெண்கள் மேல்
திணிப்பவர்களாக இருப்பவர்களே.
பெண்ணாகப் பிறந்தவள் சுடுகாட்டுக்கு போகவே கூடாது.
அது..எந்த உறவாக
இருந்த போதும் பெண்
இடு சுடுகாட்டை
அணுகவும்...தடுக்கப்பட்ட
சம்பிரதாயம் என்கிற
மதத்தை ஒட்டிய சடங்காக ...
அதுவும் கணவனை
இழந்த கைம்பெண்..
வெளியே வரக்கூடாது.
பூ பொட்டுடன்..
தலை முடியையும்.
வழித்து...மூலையில்
தனித்து விடப்பட வேண்டியவள் என்கிற
சனாதன சதியை மூளையில் சுமப்பவர்கள் ..
இந்த இறுதிச் சடங்கில்..
ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் கலந்து கொண்டதும்,
பெரும்பாலான பெண்கள் ஆடுவதும்
புதிய பரிமாணம்.
ஆண்கள் மட்டுமே
ஆடக்கூடியதாக.. சாவுக் கூத்து.
சமீபத்தில் பெண்களும்
சரி சமமாக, ஆடவிடுவதை
சகிக்காத கும்பல். இதை
எதிர்த்து கொச்சைப்படுத்துகிறது.
பிரியங்காவின் ருத்ர தாண்டவம்
சுடுகாட்டு.. சிவனை
கண்முன்னே நிறுத்துகிறது..
இவ்வாறு அந்தப் பதிவு நீள்கிறது.