மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாம். இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளா நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோது ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நேற்று காலை குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்திருந்தார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் ரஜினிகாந்த் . இது குறித்து ஹூட் செயலியில் பகிந்துள்ள ரஜினிகாந்த் “ நான் என் மகள்கள் , மருமகன் விஷால் , மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ் என்றான்.அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.. மணி 10க்கு மேல் இருக்கும்..அப்போது என்ன சார் இங்க என கேட்டேன்...இல்லை உங்களை பார்க்கணும் என்றார்.. பிஸியான ஆளாக இருப்பவர் , என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே!” என குறிப்பிட்டார்.