நடிகர் அஜித், ரேஸ் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் வல்லவர் என அனைவருக்குமே தெரியும். தற்போது, தந்தையின் வழியில், அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸிலி களமிறங்க உள்ளார். அதற்காக அவர் ரேஸ் காரை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்ப்பதுடன், பயிற்சியாளர் யார் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

கார் ரேஸில் கலக்கும் நடிகர் அஜித் குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு கார் பந்தய வீரராகவும் வெற்றியடைந்தவர் நடிகர் அஜித் குமார். அவரது கார் ரேஸ் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில், அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அவரே தொடங்கி, இரண்டு சர்வதேச கார் பந்தயங்களில் அவரது அணி வெற்றி வாகையும் சூடியுள்ளது. துபாயில் நடந்த கார் ஃபார்முலா கார் பந்தயத்தில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேபோல், இத்தாலியில், முகெல்லா கார் பந்தயத்திலும் அவரது அணி 3-ம் இடத்தை கைப்பற்றியது.

இப்படி, வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், ரேஸ் ட்ராக்கிலும் கலக்கும் அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அவரது 63-வது படமான ‘குட் பேட் அக்லி‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம், வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ரேஸ் ட்ராக்கில், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார் அஜித்.

மகனின் கார் ரேஸ் பயிற்சியாளராக மாறிய அஜித்

அஜித்தின் மகன் ஆத்விக், விளையாட்டில் பெரும் ஆர்வமிக்கவர். சமீபத்தில் சென்னை வந்த கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் ரொனால்டினோவை சந்தித்து ஆத்விக் வாழ்த்து பெற்ற புகைப்படம் வைரலானது. இந்த நிலையில், தற்போது அவர் கார் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ரேஸ் ட்ராக்கில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் பயிற்சியாளராக மாறி பயிற்சியளித்துள்ளார். தனது குடும்பத்துடன் அங்கு சென்ற அஜித், தன் மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் ஓட்ட பயிற்சியளிக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.