கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் ஊரடங்கு நிலையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையை சமாளிக்க சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விஷயங்கள் முக்கியம் என தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமா பரவி பல உயிர் தேசத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முப்பது வயதுக்கு மேற்பட்டோர் அதிகமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். சினிமாத்துறையை சேர்ந்த பலரும் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 



குறிப்பாக கொரோனா இறப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. பலரும் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டு வரும் வேளையில் சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசிபோடும்போது  தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்தும் வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் நடிகை நயன்தாரா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆக தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நயன்தாரா தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா என்ற சர்ச்சையும் எழுந்தது. 



குறிப்பாக நயன்தாரா தடுப்பூசி எடுத்துக் கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் பலவும் பரவி வருகிறது. இன்னும் நயன்தாரா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் போஸ் மட்டும் கொடுத்திருக்கிறார் என்ற வகையில் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்திடம் பேசியபோது, நயன்தாரா தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டது உண்மை. மேலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ நயன் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கு பிறகு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக நயன் கொடுத்த போஸ். இதை பலரும் தவறாக புரிந்துகொண்டு மீம்ஸ் வெளியிடுகின்றனர் என தெரிவித்தனர். 


மேலும், நயனுக்கு முன்பாகவே நடிகர் அஜித் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவரின் எந்த புகைப்படமும் வெளியே வரவில்லை என்பதால் பலருக்கும் அஜித் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் பற்றி தெரியவில்லையாம். இதற்கு முன்னதாக நடிகர் ரஜினி கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, ரஜினி எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. 


எப்போதும் சினிமா பிரபலங்கள் செய்யும் சின்ன விஷயங்கள்கூட வைரலாவது உண்டு. இந்த வகையில் நயனின் தடுப்பூசி ஃபோட்டோ ஒரு விழிப்புணர்வாக அமைந்தால் நலமே..