கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 10-ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08.03.2023 முதல் 10.03.2023 வரை: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
11.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
12.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை முடிந்த பின், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் அதிகப்படியான பனி நிலவி வந்தது. நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உறைபனி நிலவியது. பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனி இருக்கும் ஆனால் இந்த ஆண்டு மார்ச் தொடங்கியும் பனியின் அளவு குறையவில்லை. அதிகாலை நேரத்தில் கடும் பனி நிலவி வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் கடும்பனி நிலவி வருகிறது. காலை 8 மணி வரை பனி பொழிவு உள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்ட வண்ணம் வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். கடந்த மாதம் சென்னை விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக சில விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. அதேபோல் இங்கிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. ஒரு சில விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
சென்னை மட்டுமல்லாமல், கடலூர், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகாலை வேலையில் கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பனி விலகியவுடன் ஓட்டிச்செல்கின்றனர்.
அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் பனியின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நிலையில் முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.