கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 






06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.


07.09.2023 முதல் 10.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.






சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக டெல்டா மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது. 


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் மழைநீரில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 1600 ஏக்கர் உளுந்து, 1200 ஏக்கர் நிலக்கடலை மழைநீரால் சூழப்பட்டதாக வேளாண் துறையினர் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதேபோல் திருவாரூரில் நெற்பயிர்கள் 27 ஆயிரம் ஏக்கர், உளுந்து 18 ஆயிரம் ஏக்கர், 2,170 ஏக்கர் கடலை சேதமடைந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நாகையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 35 ஆயிரம் ஏக்கர் நெர்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து மழையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.


எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர்களுக்கான ஈரப்பத அளவை 22% வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.