தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் வெயில் இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


அதிகபட்ச வெப்பநிலை :   


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவானது, இது இயல்பை விட 2.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.  அதனை தொடர்ந்து திருத்தணியில் 40.6 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம்), மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகம்), சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கரூர் பரமத்தி மற்றும் மதுரையில் இயல்பை விட 5.3 டிகிரி செல்சியஸும் 4.6 டிகிரி செல்சியஸும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.   


06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெப்பஅலை எச்சரிக்கை:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் திடீர் கனமழை பெய்தது. தாம்பரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் பூமியின் உஷ்ணம் சற்று தணிந்து காணப்பட்டது. இருப்பினும் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.


வெப்ப அலை:  இந்நிலையில் தமிழ்நாட்டில் உட்பகுதியில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை வீசுக்கூடும் என்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.