நாட்டின் பல பகுதிகளுக்கு அதிக மழை கொடுக்கும் தென் மேற்கு பருவ மழை ஜூன் 3ம் தேதி அல்லது 4ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் மேற்கு பருவ மழை: 


தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.  இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழை தான். இதனால் பல மாநிலங்கள் வளம் பெருகிறது.


தென்மேற்கு பருவ மழை முதலில் கேரளா மாநிலத்தில் தான் தொடங்கும். கடந்த ஆண்டு சராசரி அளவு மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை விட சற்று குறைவாக பதிவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ நிகழ்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இது  போன்ற சூழலில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லும் தகவல்: 


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28  டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.