அடுத்த 2 தினங்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13.01.2023 மற்றும் 14.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15.01.2023 முதல் 17.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலை நகரமான ஊட்டியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 10 நாட்களாக குளிரின் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் தற்போது வெப்பநிலை குறைந்து வருகிறது. இது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊட்டியில் கடந்த 10 நாட்களாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. குன்னூர் மற்றும் வெலிங்டனின் சில பகுதிகளில் உறைபனி உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும். ஆனால், இந்த முறை, காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை ஊட்டியில் தாமதமாக தொடங்கின. இதனால் உறைபனியும் தாமதமாக தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் உறைபனி தொடங்கி ஜனவரி இரண்டாம் வாரம் வரை நீடித்து வருகிறது.
ஆண்டு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, குளிர்காலம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். உறைபனி காரணமாக ஊட்டியில் தேயிலை தோட்டங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. இங்கு முதல் உறைபனி உருவானது 1819 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் என்பது குறிப்பிடத் தக்கது.