தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 26.04.2023 மற்றும் 27.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.04.2023 மற்றும் 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. கடந்த வாரம் கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. ஆனால் இந்த மழையில் காரணமாக இரண்டு நாட்களாக வெப்பநிலை சற்று குறைவாக பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 36.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 32 டிகிரி செல்சியஸ், வேலூர் 34.9 டிகிரி செல்சியஸ், சென்னையில் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.க்ஷ
கத்தரி வெயில்:
சுட்டெரித்த கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கும் என்பதால் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.