தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  மாலத்தீவு  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை ஒரே நாளில் பெய்த காரணத்தால் மாநகரமே ஸ்தம்பித்து போனது, மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரனை, துரைப்பாக்கம், மணலி, தரமணி, பெருங்குடி, பெரும்பாக்கம், வட சென்னை என அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் வட கிழக்கு பருவ மழை 50% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை இயல்பாக 718.5 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 1078.2 மிமீ மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி அரபிக்கடல் பகுதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


கோயம்புத்தூர் 107.6, வால்பாறை (கோயம்புத்தூர்) 12.0, குன்னூர் (நீலகிரி) 10.0, கடலூர் 9.6, அதிராம்பட்டினம்  (தஞ்சாவூர்) 3.0, திருச்சிராப்பள்ளி 2.6, திருப்பதிசரம் (கன்னியாகுமரி) 17.0, கோவில்பட்டி  (தூத்துக்குடி) 11.5, திருநெல்வேலி 9.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.