தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று அதிகாலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த 4 முதல் 5 மணி நேரம் வரை அதாவது காலை 11 மணி வரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "27 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே ஆகும், 1996 ஆம் ஆண்டிற்கு பின் ஜூன் மாதத்தில் 100 மிமீ கடந்து மழை பதிவாகியுள்ளது" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லிமீட்டரில்):
மீனம்பாக்கம் (சென்னை) 137.6, நுங்கம்பாக்கம் (சென்னை) 67.4, கடலூர் கடலூர் 28.0, காரைக்கால் 23.0, புதுச்சேரி 18.0, வால்பாறை (கோயம்புத்தூர்) 8.8, கொடைக்கானல் (திண்டுக்கல்) 7.0, நாகப்பட்டினம் 6.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 6.0, வேலூர் 2.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 2.0, திருத்தணி (திருவள்ளூர்) 2.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வாரத்தின் முதல் நாள் நல்ல மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அலுவலகம் செல்லும் மக்கள் தொடர் மழையால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்பதால் அதற்கு ஏற்றவாறு அலுவலகம் செல்லும் நபர்கள் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.