சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோவியா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் 5 கோடி ரூபாய் பணம், 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 200 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தவுடன் சங்கர் நான் இப்படித்தான் நீ வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு சென்று விடு என கூறி தாக்கியுள்ளார். 


இதனை அடுத்து இச்சம்பவத்தை பெரிது படுத்தாமல் மன வேதனையுடன் சங்கர் உடனே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் சங்கரின் நடவடிக்கை பெண்களை வீட்டுக்கு அழைத்து வரும் வரை வளர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சங்கரின் மனைவி இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரும் மாமனாருமான சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏதும் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா வீட்டிலிருந்து புறப்பட்டு சர்க்கார் கொல்லப்பட்டியில் வசித்து வரும் அவரது வீட்டிற்கே திரும்பிச் சென்றார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் தந்தையிடம் கூறிய மனோவியா சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகாரை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மனைவி மனோவியாவை மிரட்டும் நோக்கத்தில் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளதாகவும், அதனை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி மீண்டும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகாரில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அவரது மனைவி பேபி, மகள் கலைவாணி, மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து, வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அது மட்டுமல்லாமல் கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி பேபி, மகள் கலைவாணி, மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு ஆஜராகாமல் சதாசிவம் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி போலீசார் விசாரணைக்கு எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் செப்டம்பர் 4 ஆம் தேதி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், முன்ஜாமின் மனு மீதான விசாரணை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார். இதைடுத்து இன்று சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி ஆகியோர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா தனித்தனியே விசாரணை நடத்தினார்.